கருத்துக்களைக் கட்டமைப்பது என்பது விவாதங்களில் ஒரு முக்கியமான கருத்தமைவு. விவாத அடிப்படைகளையே திசைமாற்றவது எவ்வாறு என்பதை இதனை முன்வைத்து நாம் விளக்க முடியும். ஜோ.டி.குரூஸ் விஷயத்தில் இடதுசாரிகள் அல்லாது தமிழில் எழுதுகிற எந்த எழுத்தாளனும் தமது சொந்தக் கருத்துக்களை இதுவரை எழுதவில்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதற்கு 'லைக்' போடுகிறார்கள். அல்லது சித்தார்த் வரதராஜன் இதுபற்றி எழுதியதை 'ஷேர்' செய்கிறார்கள். ஓன்று சொந்தக் கருத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எழுதுவதற்கான தர்க்கம் இல்லை அல்லது வெளிப்படையான மனம் இல்லை. இவர்கள் செய்கிற வேலை மோடிக்கு ஆதரவான மனநிலையைக் கட்டமைப்பது எனும் கள்ளத்தனமான வேலைதான். அரவிந்தன் நீலகண்டன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அறிவித்துக் கொண்ட இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ்.செயல்பாட்டாளர். அவரை நண்பராகவும் உடன்பயணியாகவும் கொண்டவர்களைப் பார்த்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். சித்தார்த் வரதராஜனை அப்படிச் சொல்லிவிடமுடியாது. குஜராத் படுகொலைகள் பற்றிய முழுமையான நூலொன்றின் தொகுப்பாளர் அவர். இலக்கியமும் திரைப்படமும் அறிந்தவர் அவர். ஷோலேவில் நடித்த ஹேமமாலினி பிஜேபியை ஆதரிப்பதால் நாம் ஷோலேவை நிராகரிக்க முடியுமா என்கிறார் அவர். பால்தாக்கரேவையும் சிவசேனாவையும் பின்னாளில் ஆதரித்த தலித் கவிஞரான நாமதேவ் தசலைப் பதிப்பித்த நவயானா ஜோ.டி.குருஸைப் பதிப்பிக்க மறுப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் அவர். சாரம்சமாக, படைப்பாளியின் அரசியலுக்காகப் படைப்பை நிராகரிக்க முடியுமா? என்பது சித்தார்த் வரதராஜனின் கேள்வி.
நாமதேவ் தசல் பிரச்சினை சம்பந்தமாக நவயானாதான் பதில் சொல்ல வேண்டும். அதனோடு ஆர்,ஆர்.சீனிவாசன் கேட்கிறது போல பெரியார் புத்தகத்தை ரவிக்குமாரும் ஆனந்த்தும் நடத்துகிற நவயானா பதிப்பிக்காது என்பதனோடும் இப்பிரச்சினையைச் சேர்த்து நாம் யோசிக்கலாம். ஹேமமாலினி குறித்த ஒப்பீடு பொருத்தமானது அல்ல என நினைக்கிறேன். ஷோலேவைப் பொறுத்து ஹேமமாலினி படைப்பாளர் இல்லை. திரைப்பட இயக்குனர் அல்லாத ஒருவர் திரைப்படத்திற்கான படைப்பாளி அந்தஸ்த்தைக் கோரமுடியாது. ஹேமமாலினி அறிவுசார்ந்த காரணங்களுக்காக அறிவுலகில் எந்த அங்கீகாரமும் பெற்றவர் இல்லை. ரஜினிகாந்த் உள்பட அரசியல் சாராத நடிக நடிகையர் சொல்கிற எதையும் அறிவுலகம் பொருட்படுத்துவது இல்லை. ஜோ.டி.குரூஸ் பிரச்சினை இத்தகையது இல்லை. ஜோ.டி.குரூஸ் ஒரு படைப்பாளி எனும் அளவில் வாசகர்களின் உளவியலை உருவாக்குகிறவர். கருத்துக்களை உருவாக்குபவர். அந்தக் காரணத்திற்காகவே அவருக்கு அறிவுலகில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
அரவிந்தன் நீலகண்டனின் பதிவுகளின்படி அவர் ஏற்கனவே இந்துத்துவ அமைப்புகளில் சென்று வகுப்புகள் எடுத்திருக்கிறார். அ.மார்க்ஸ் சொல்கிறபடி இந்துத்துவ அமைப்புகளில் அவர் உரைநிகழத்துகிறார். சித்தார்த்த வரதராஜன் தொகுத்த குஜராத் குறித்த நூல் சொல்கிறபடி மோடி என்கிற தனிநபர் கொலைகாரனை, 'தூரதரிசனம் கொண்ட தேசத்தலைவன்' என்கிறார் ஜோ.டி.குரூஸ். ஜோ.டி.குரூஸ் பிரக்ஞைபூர்மான இந்துத்துவவாதியாகக் அமைப்புசார்ந்து கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறார். அதனது தொடர்ச்சியே அவரது தெளிவான அறிக்கை. அறுதியில், அரவிந்தன் நீலகண்டனுடனான உரையாடலில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? மோடி பரதவ மக்களின் நலன் காப்பார், அதனால் நான் அவரை ஆதரிக்கிறேன். அதாவது, 'தான் சார்ந்த சமூகத்தின் மக்களை ஒருவன் பாதுகாப்பான்' என நம்பினால், 'பிற சமூக மக்களைக் கூட்டமாகப் படுகொலை செய்தாலும்' அவனை நான் ஆதரிப்பேன் என்றுதானே குரூஸ் சொல்கிறார். இதனைத் தானே இட்லர் சொன்னான். சாவர்க்கர் சொன்னான்.
சித்தாரத் வரதராஜன் மொழிபெயர்ப்பாளராகத் தார்மீக நிலைபாடு எடுத்த வ.கீதாவின் அறிக்கையையும் படிக்க வேண்டும். 'மோடியோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒருவரோடு என்னை இணைத்துக் கொள்ள முடியாது'. தயவுசெய்து சித்தார்த் வரதராஜன், அனந்தமூர்த்தி, நந்திதா தாஸ் போன்ற எழுத்தாளர்களும் திரைப்பட நடிகையரும் சொல்வதையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று மட்டுமெ சொல்லத் தோன்றுகிறது. ஓரு கலைஞன் என்பவன் நிராதரவான மக்களின் பக்கம் நிற்பவன், 'தனது' மக்களின் பக்கம் மட்டுமே நிற்பவன் அல்லன். ஜோ.டி,குரூஸ் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலான சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் பிரச்சினையில் எங்கே நிற்கிறார் என்பதை சித்தார்த் வரதராஜனுக்கு நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
நான் திரும்பத்திரும்பவும் கடந்த 15 ஆண்டுகளாகச் சொல்லிவருவதைத் தான் இப்போதும் சொல்கிறேன். இடதுசாரிகள் கலைஇலக்கியம் சார்ந்த தமது ஆசான்களின் கூர்மையான பார்வைகளைத் தொலைத்துவிட்டார்கள். எழுத்தாளர்களை அல்லது பதிப்பாளர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டும் எனும் காரணத்திற்காக, தம்மைப் புகழ்வதில் பெறும் புளகாங்கிதத்திற்காக இடதுசாரிகள் மிகுந்த சமரசங்களைச் செய்து கொண்டிருப்பதன் விளைவுகளை இப்போது அறுவடை செய்கிறார்கள்.
மதம், இனம், சாதி, வர்க்கம், பால்நிலை என எழுத்தாளர்கள் கூர்மையாகச் சார்புநிலை எடுத்துவரும் காலம் இது. தமிழகத்தைப் பொறுத்து இந்துத்துவ கலாச்சார அரசியலின் பிதாமகன் ஜெயமோகன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பவா செல்லத்துரை ஜெயமோகனிடம் இ.எம்.எஸ்.பற்றி புத்தகம் எழுதும்படி கேட்கிறார். பரதேசி படத்தின் கிறித்தவப் பாதியார் பாத்திரச் சித்தரிப்பில் வெளிப்பட்டது நாஞ்சில்நாடனின் முகம். இவருக்கும் இ.எம்.எஸ்க்கும் என்ன சம்பந்தம்? இவர் சாகித்ய அகாதமி பரிசு பெற்றதும் இ.எம்.எஸ்.புத்தகம் படிப்பதாகப் போஸ் கொடுக்க அதனை இடதுசாரிகள் பிரசுரித்துப் புளகாங்கிதப்பட்டார்கள்.
கோவை ஞானியால் பிறர் உதவி இல்லாமல் எதனையும் வாசிக்க முடியாது. ஜெயமோகனின் நாவல்களை மட்டும் படித்துவிட்டு ஜெயமோகனைக் கொண்டாடும் அவர் அரசியல் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஜெயமோகன் எஸ்.வி.ஆர்.மீது கடும் தாக்குதல் தொடுத்தபோது எஸ்.வி.ஆருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் குறைவு. இப்போது ஜோ.டி.குருஸ் பிரச்சினையை முன்வைத்து மோடி ஆதரவில் ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் கரம்கோர்த்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனுக்கும் வா.மு.கோமுவுக்கும் பிரச்சினைகளின் அடிப்படைகள் கூடத்தெரியவில்லை. ஜோ.டி.குருசின் அரசியல் நிலைபாடு எவருக்கும் ஒரு பிரச்சினையில்லை. எவரும் எந்த அரசியல் நிலைபாடும் எடுக்கலாம்; அதில் என்ன பிர்ச்சினை? பிரச்சினை, மோடி வெறும் அரசியல்வாதியாக மட்டும் இருக்கவில்லை என்பதுதான். இட்லரைப் போல இனப்படுகொலை நடத்திய ஒருநபர் மோடி. வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்?
பொதுவாக நிறைய வாசிப்பவர்களுக்குத் தெரியும், சாரு நிவேதிதா ஒரு பொருட்படுத்தத்தக்க கருத்துச் சொல்லி இல்லை. இடதுசாரி பணக்காரர்கள் மோடியைக் கண்டு பயப்படுகிறார்கள் என்கிறார் ஜெயமோகன். கார்டியன் பத்திரிக்கையை ஏகாதிபத்திய ஊடகம் என்று சொன்னவர் ஜெயமோகன். அது சரி, ஒரு சுயாதீனப் பதிப்பகமான நவயானா முடிவைக் கண்டு இவர்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறார்கள்? எது எவ்வாறாயினும் இந்துத்துவம் ஒரு கருத்துப்போக்காக நவீன தமிழ் இலக்கிய வெளியில் காலூன்றிவிட்டது. ஜோ.டி.குருஸ் சகா அதற்கொரு சான்று.
நான் சொல்ல வந்த பிரதானமான விஷயத்தை மறந்துவிட்டேன். மார்க்சீய ஆசான்கள் இலக்கியத்தின் சுயாதீனத் தன்மையையுயும் அழகியலையும் அங்கீகரித்தார்கள். அதனது வலது இடது சார்புகளையும் தாண்டி இலக்கியம் சமகாலத்தை சிருஷ்டிகரமாகப் படைக்கிறது என்றும் சொன்னார்கள். அதனது முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் செய்தார்கள். இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் சார்பு நிலைகள் இல்லை என அவர்கள் சொன்னார்களா? யதார்த்தவாதம் குறித்துக் கடுமையாக முரண்பட்ட லூகாச்சும் பிரெக்டும் கூட இப்படிச் சொல்லவில்லை. நாம் இந்தத் தரினத்தைத் தொலைத்துவிட்டோம்.
ஜோ.டி.குரூஸ் பிரச்சினை தொடர்பாக ஜெயமோகன் எழுதியிருப்பதை மேலோட்டாகப் பார்ப்பவர்களுக்கு அவர் கருத்துச் தந்திரத்தின் காவலனைப்போல் பேசுவதாகத் தோன்றும். இவர்தான் இந்திய ராணுவவீரன் ஒருவன் எழுதிய கடிதத்தை மேற்கோளாகக் காட்டி ஈழத்தில் இந்திய ராணுவம் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என எழுதியவர். இவர்தான் மூவர் மரணதண்டனை தொடர்பான விவாதங்களில் மரணதண்டனையை ஆதரித்து எழுதி வருபவர். இவர் அடிக்கடி சில மார்க்சீயர்கள் தமக்கு ஆசான்கள் எனவும் கூறிக்கொள்கிறார். ஜெயமோகன் சொல்கிற ஆசான்கள் கறாரான அரசியல் நிலைபாடுகள் எடுக்காத, வாசிப்பில் தேங்கிப்போன பழம்பெருச்சாளிகள் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.
அ.மார்க்ஸ் பற்றிய ஜெயமோகனின் வசவுகளைப் பாருங்கள். எனக்கு ஆச்சரியமில்லை. இவர்தான் அருந்ததி ராயை குருவிமண்டை என்று சொன்னவர். இவர்தான் திகசிக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி பரிசை கடைசிகால பென்சன் என்றவர். திகசி பெருந்தன்மையானவர், 'நீ பாசிஸ்ட் ஆனால் கலைஞன்' என்று சொன்னார். என்னளவில், தனது கருத்து சார்ந்த எதிரிகளை எதிர்கொள்வதில் ஜெயமோகனின் இந்துத்துவ வெறிப்பேச்சுத்தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறது.
“எழுத்தாளன் எதையும் சொல்லலாம். எதையும் சிந்திக்கலாம். அந்தச் சுதந்திரத்தையே இந்தியா வழங்கியிருக்கிறது. காந்தியின், அம்பேத்கரின், நேருவின் இந்தியா. எந்த அடிப்படையைக் கொண்டு நேற்று எம்.எஃப் ஹ_செய்னின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தேனோ அதே அடிப்படையைக் கொண்டு இப்போது ஜோவை ஆதரிக்கிறேன். ஹசெய்னை ஆதரித்துக்கொண்டு தஸ்லிமா நஸ்ரினுக்கு கொலைமிரட்டல் விடுப்பவர்களின் மேடையில் முழங்கும் போலிகளுக்கும் கூலிகளுக்கும் நான் சொல்வதை உணரமுடியாது. நான் பேசுவது அடிப்படை நேர்மையும் நுண்ணுணர்வும் கொண்டவர்களிடம். எழுத்தாளன் எதைச்சொல்லவும் உரிமைகொண்டவன். சமயங்களில் அவன் சொல்வது பிழையாக இருக்கலாம், கிறுக்குத்தனமாகவும் அத்துமீறலாகவும் இருக்கலாம். ஒழுக்கமீறலாகவோ அறமீறலாகவோகூடத் தோன்றலாம். ஆனால் அவன் வெற்று அரசியல்குண்டர்களால் கட்டுப்படுத்தப்படுவானென்றால் அங்கே சிந்தனையும் கலையும் அழியத்தொடங்குகின்றன. இது இன்னும் சீனாவோ சவூதி அரேபியாவோ ஆகவில்லை என்று மட்டும் இந்தக்கும்பலுக்குச் சொல்லவிரும்புகிறேன்”.
இதை மாற்றி இப்படிச் சொல்லாம் : எழுத்தாளன் என்பவன் கடவுள். எழுத்தாளன் எழுத்தாளன் என்பவன் கொலை செய்யலாம். எழுத்தாளன் என்பவன் வல்லுறவு செய்யலாம். எவனும் அவனைக் கேள்வி கேட்க முடியாது. ஹலோ மை டியர் ஜெயமோகன், ரோமன் போலன்ஸ்க்கி அமெரிக்கச் சிறுமியை வல்லுறவு செய்ததற்காக பாரிஸில் வனவாசம் அனுபவிக்கிறார். கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளன் ஒருவனின் நாவலை அடியொற்றி விசாரித்ததில் அவன் ஒரு கொலைகாரன் என அடையாளம் காணப்பட்டான். வாஜ்பாய் கவிஞர் என்பது போல இட்லர் ஓவியன் தெரியுமா? அவனது செல்லப்பெண் லீனி ரீப்சிந்தால் ஒரு தேர்ந்த ஆவணப்பட இயக்குனர் என்பது தெரியுமா? குற்றவுணர்வில் தான் சிறுவயதில் நாசி படையில் இருந்தததை நாவலாசிரியர் குந்தர் கிராஸ் வெளிப்படுத்தியபோது அவரை ஐரோப்பிய அறிவுலகம் கடுமையாக விமர்சித்தது தெரியுமா? இதற்கெல்லாம் பினனிருந்த அறவுணர்வு என்ன என்பது உமக்குத் தெரியுமா?
நீங்களும் ஜோ.டி.குருசும் என்ன விமர்சனததுக்கு அப்பாற்படவர்களா? இந்தக் கேள்விக்கு மட்டும் நீரும் உமது பரிவாரங்களும், ஜோ.டி.குருசும் பதில் சொல்லுங்கள். நரேந்திர மோடியை எதிர்க்கும் நாங்கள் அனைவரும் அவன் ஒரு இனக்கொலையாளி என்கிறோம். சுற்றி வளைத்து கதை எல்லாம் அளக்காமல், இதற்கு மட்டுமே ஒரே ஒரு வரியில் பதில் சொல்லவும். கலைஞனின் சுதந்திரம், அறவுணர்வு பற்றி பிற்பாடு பேசலாம்...
ஓரு பதிப்பகம் ஒரு எழுத்தாளரைப் பதிப்பிப்பதா இல்லையா என்பது அவரவர் விருப்பம். பதிப்பகம் நம்புகிற வெளிப்படையான விஷயங்களுக்கு விரோதமாகப் படைப்பாளி இருக்கிறார் என்பதால்தான் நவயானா ஜோ.டி.குருசை பதிப்பிக்க மறுத்தது. நவயானா ஆனந்த்தின் அறிக்கையைப் பார்க்க அவரது நிலைப்பாடு 'சுத்துமாத்து' என்பது தெரிகிறது. கீதா தனது மொழிபெயர்ப்பைக் கொடுக்க இப்போதும் சம்மதிக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் 'நிதானமாக யோசிக்காமல், கோபப்பட்டு அந்த முடிவைத்தான் எடுத்துவிட்டதாக' இப்போது 'சமர்சால்ட்' அடிக்கிறார் ஆனந்த். கடேசியில் இன்னாப்பா ஆச்சு? ஆனந்த்துக்கு பதிப்பிக்க விருப்பம். வா.கீதா ஜோ.டி.குருசுடன் பேசிவிட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார். ஜோ.டி.குருஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறாரா அல்லது வா.கீதா மாற்றிக்கொள்வாரா என்பதுதான் இப்போது 'சஸ்பென்ஸ்'. அனா அரந்த் சொன்னது போல, நாம் 'இருண்ட காலத்திலிருந்துதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்'.
நமது பல நண்பர்கள் ஒரு விஷயத்தைக் குழப்பிக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. இலக்கியமும் அரசியலும் முற்றிலும் வேறு வேறான வெளிகள், இரண்டுக்கும் 'சம்பந்தமேயில்லை' என்கிற மாதிரி ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள். இவை வேறு வேறான வெளிகள்தான். 'முற்றிலும்'- வேறு வேறான வெளிகள் இல்லை. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் 'நேரடியான' உறவுகள் இல்லைதான். 'உள்ளார்ந்த' உறவுகள் இல்லை எனச் சொல்ல முடியாது. இப்படியான உறவுகள் இல்லையெனில் ஏன் நாம் 'உள்ளொளி', 'சமூகச்சார்பு' போன்ற 'அடிப்படைகளிலும்' இலக்கியத்தை அணுகுகிறோம்? விஞ்ஞானத்துக்கும் அரசியலுக்கும் என்ன 'நேரடி' உறவு இருக்கிறது? அருவகணிதத்திற்கும் அன்றாட வாழ்வுக்கும் என்ன 'நேரடி' உறவு இருக்கிறது? கூடங்குளம் விஞ்ஞானத்தின் பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. உலக வங்கி அறிக்கைப் புள்ளிவிவரங்களில் அருவகணிதம் பாவிக்கப்படுகிறது. இப்படித்தான் இலக்கியத்திற்கும் அரசியலுக்குமான 'சிக்கலான' உறவை நாம் நிதானமாக வாசிக்கும்போது கண்டடையமுடியும்.
மோடியை ஆதரிப்பது எனும் பிரச்சினை தேர்தல் அரசியலும் இலக்கிய உன்னதமும் பற்றிய பிரச்சினை பற்றியதல்ல. எழுத்தாளனின் அரசியல் தேர்வுகள் குறித்த பிரச்சினையும் அல்ல. இது மூவாயிரம் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் அரசு இயந்திரத்தினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அறவுணர்வு சார்ந்த பிரச்சினை. அந்த இனக்கொலை அரசுக்குத் தலைமைதாங்கிய ஒருவரை வளர்ச்சியின் நாயகன் என்றும், தூரதரிசனம் கொண்ட தேசத்தலைவன் என்று முன்னிறுத்துவது தொடர்பான பிரச்சினை. கருத்துச் சுதந்திரமும் எழுத்தாளனின் தேர்வும் என்று பேசுபவர்கள் இந்த அடிப்படையைத் தவறவிடுகிறார்கள். தமிழில் எழுதுகிற நூற்றுக்குத் தொண்னூறு சத எழுத்தாளர்கள் தமது அனுபவம் தவிர பிறர் அனுபவம் அறியாதவர்கள். பரந்த வாசிப்பு அற்றவர்கள். இவையெல்லாம் தான் பிரச்சினையின் ஆதார வேர்கள். வேடிக்கையான விஷயம், இந்தக் கிணற்றுத்தவளைகள் அரசியல் அபிப்பிராயமும் பொதுவிஷயங்கள் குறித்தும் பேசத் துவங்கிவிடுவதுதான்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|