மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.
கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.
ஈழ விடுதலைப் போராட்டம் இருளையும் பிசாசுகளையும் மட்டுமே பிரசவிக்கவில்லை; அது உன்னதங்களையும் அற்புதங்களையும் சேர்த்தபடியே அழிந்திருக்கிறது. ஈழம் குறித்து எழுதப்பட்ட பெரும்பாலான புனைவுகள் ஈழம் குறித்த வசவும் வன்மமும் நிறைந்த இருண்ட சித்திரத்தையே தந்திருக்கின்றன. வரலாற்றின் கைதிகளாக அந்த மனிதர்களின் மீது பரிவு கொண்ட படைப்புகள் அரிதாகவே இருக்கின்றன. அந்த இடைவெளியை லெனின் சிவம் தான் இதுவரை உருவாக்கிய '1999' மற்றும் 'ஒரு துபபாக்கியும் ஒரு மோதிரமும்' எனத் தனது இரண்டு திரைப்படைப்புகளிலும் கடந்து சென்றிருக்கிறார்.
விமர்சனத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் ரகசியமும் வன்மமும் அடையாளத்தை மறைத்துக் கொள்தலும் எங்கே சென்று முடியும்? ஏன் வன்முறை என்பது இதுவரையிலும் வெளியான பாதிக்கும் மேலான புகலிடத் தமிழ் சினிமாவில் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது? பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஏன் யுவவயது இளைஞர்கள் தமக்குள் திரும்பத்திரும்பக் கொலைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்? அரசியல்வாதிகளுக்கு இதற்கான காரணங்கள் மிகத்தெளிவாகத் தெரியும். அவர்கள் ஒரு போதும் ஈழத்தமிழ் சமூகத்தை இதிலிருந்து மீட்பதற்கான யத்தனங்களை மேற்கொள்ளப் போவதில்லை. உளவியலாளர்கள் வன்முறையின் வலிகளை எதிர்கொண்டவர்களுக்கான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும்; வன்முறையைச் செலுத்துகிறவர்களும் வன்முறைக்கு ஆட்படுகிறவர்களும் வரலாற்றின் கைதிகளாக, அதனது விளைபொருள்களாக இருக்கும்போது, அந்த மனிதர்களின் பாலான பரிவுகொண்டு அதனைச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதை ஒரு அறமாகக் கொள்வது கடப்பாடு கொண்;ட ஒரு கலைஞன் அல்லாது வேறு எவராலும் சாத்தியமாகப் போவதில்லை.
புகலிட சினிமா உருவாக்கிய கனடாவைச் சேர்ந்த லெனின் சிவமும் பிரான்சைச் சேர்ந்த சதா பிரணவனும் அத்தகைய கலைஞர்களாக உருவாகியிருக்கிறார்கள்.
தற்கொலை, படுகொலை, வல்லுறவு, மனமுறிவு, குற்றவுணர்வு அனைத்துமே வன்முறை எனும் உணர்வின் வேறு வேறு வடிவங்கள்தான். ஓரு மனிதனின் உடலை அழிப்பது மட்டுமல்ல அவனது ஆன்மாவை அழிப்பதும் வன்முறைதான். மனிதன் இந்த உணர்விலிருந்து சதா தப்பிக்க நினைக்கிறான். கண்டங்கள் தாண்டி அது அவனைத் தொடர்கிறது. ஈழம், கனடா என்றெல்லாம் இதற்குப் பேதமில்லை. அவனுக்கு அதிலிருந்து தப்பித்து ஒளிவதற்கு ஏதும் இடமில்லை. தனக்குத் தானே அவன் தளையிட்டுக்கொண்ட கலாச்சாரம் அல்லது ஒழுக்கம் என்பதும், வெளிப்படைத்தன்மையற்ற மரபார்ந்த மூடுண்ட மனமும் கூட புகலிட வன்முறை வாழ்வின் தொடர்ச்சிக்கான காரணமாக அமைந்துவிடுகிறது. இந்தத் தரிசனத்தைக் கொண்டிருக்;கும் திரைப் படம்தான் லெனின் சிவம் உருவாக்கிய 'ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்' எனும் திரைப்படம்.
தமிழக சினிமாவின் கதைகூறு முறையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட, பிரேசில், அர்ஜன்டினா போன்ற தென் அமெரி;க்காவின் புதிய தலைமுறைக் கலைஞர்களான வால்ட்டர் செல்லாஸ், இனரிட்டு, ரோபர்ட் ரோட்ரிக்ஸ் போன்றவர்களின் கதைகூறு முறையினால் பாதிப்புற்ற திரை இயக்குனராக லெனின் சிவம் இருக்கிறார். நேர்கோட்டுக் கதை சொல்லலைக் கலைத்தபடி முன்னும் பின்னுமாகக் கதை சொல்வது, ஒரு நாவலின் அத்தியாயங்களை முன்னும் பின்னுமாக நகர்த்துவது போன்றது அவர் பாணி. விளைவுகளை அறிமுகப்பகுதியில் வைத்து, காரணங்களைத் தேடிச்சென்று, இறுதியில் பார்வையாளனின் அலைவுறும் மனத்தில் நிறுத்தக்குறி வைத்து, சிந்தனைகளுடன் அவஸ்தைகளுடன் அவனை வெளியேற்றும் கதைகூறு முறையுடன், தத்தமது சமூகங்களின் எரியும் பிரச்சினைகளைச் சித்திரிப்பது தென்னமெரிக்கப் புதிய தலைமுறை இயக்குனர்களின் பாணி.
இந்தப் பாணியை பல்காலச்சார சமூகத்தில் வாழ நேர்ந்த, ஈழ சமூகத்தின் அசலான பிரச்சினைகளுடன் இணைத்துத் தனக்கான கதைகூறு முறையொன்றை லெனின் சிவம் தனது இரண்டு படங்களிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
லெனின் சிவத்தின் 'எ கன் அன்ட் அ ரிங்' திரைப்படம் ஒரு தற்கொலைக் காட்சியுடன் துவங்குகிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தகப்பனாரைச் சந்தித்து, அவளைக் காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்தும் அந்தச் சிறுமி கொலை செய்யப்படக் காரணமாக இருந்திருக்கிறோம் எனும் குற்றவுணர்வில் அலைவுறும் ஒரு போலீஸ் அதிகாரி, அதிலிருந்து மீளும் மானுட உன்னதத்துடன் படம் முடிகிறது. தற்கொலை, படுகொலை, இரு தலைமுறைகள் மற்றும் இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான கலாச்சார அதிர்ச்சிகளால் விளையும் கொலையுணர்வு என நிகழ்காலத்தை அலசும் திரைப்படம், பின்னோக்கிப் போய் உடைந்துபோன ஒரு சமூகத்தின் விழுமியக் கட்டமைப்புகளின் விரிசலில் வெளிக்கிளம்பிய வன்முறையின் வேர்களில் அதற்கான காரணங்களைக் காண முயல்கிறது.
அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக, இயல்பாகத் தோன்றும் மனிதர்களிடமும் கூட உள்ளுறங்கும் வன்முறை உணர்வின் தடங்களை திரைப்படம் பற்றிப் பிடிக்க முனைகிறது. வன்முறை தீயதா, விடுதலை தருவதா எனும் அறம் சார்ந்த கேள்விகளுக்குள் திரைப்படம் போகவில்லை; அப்படிப் பயணம் செய்ய வேண்டிய அவசியமும் ஓரு கலைஞனுக்கு இல்லை. ஒவ்வொரு மனிதனையும் இந்த வன்முறையை நோக்கிச் செலுத்திய கட்டமைப்புகள், நம்பிக்கைகள், மனச்சிதிலங்கள், எதிர்ப்புணர்வுகள் யாது என்கிற உளவியல் தேடலைப் பாத்திரங்களின் நடத்தைகளினூடே இத்திரைப்படம் முன்வைக்கிறது.
கனடிய தமிழ் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளிடம் எவ்வாறு வேறு வேறு காரணங்களுக்காக வன்முறை உணர்வு தொடர்ச்சியாக வளர்கிறது என்பதனைப் படம் அலசுகிறது. போராளி இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட இருவர்@ அவர்கள் வாழ நேர்ந்த அதே சூழலில் தனது உறவுகளை முழுமையாகப் பறிகொடுத்த ஒரு அகதிப் பெண், அவளைக் கனடா வரவழைத்து விட்டு அவளை விமான நிலையத்திலேயே நிற்கவைத்துத் தவிக்கவிடும் இளைஞன், போரினால் பாதிப்புற்ற குழந்தைகளுக்கென நாட்டில் தங்கிவிடும் மனவியை விட்டுவிட்டுத் தனது பெண் குழந்தையுடன் கனடாவுக்குப் பெயர்ந்த மத்தியதரவயது மனிதர், தனது மகனின் தற்கொலையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பல படுகொலைகள் புரிந்த ஒரு போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதி, தனது சகாக்களைக் காட்டிக் கொடுத்த குற்றவுணர்வில் அலைவுறும், தனது மனைவியைப் பிறிதொருவனுக்குப் பறிகொடுத்த முன்னாள் போராளி, தனது மகனின் எதிர்காலத்தில் தன்னுடைய கடந்த காலத் தோல்வியை மீட்கும் ஒரு முன்னாள் போராளித் தகப்பன் என இவர்கள் அனைவரும் ஈழத்தின் முப்பதாண்டு காலப்போர் அனுபவங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு தலைமுறையின் பிரதிநிதிகள்.
இன்னொரு தலைமுறையின் பிரதிநிதிகளாக சமப்பாலுறவுக் காதலில் ஈடுபட்ட இரு இளைஞர்களும், விருப்பத்திற்கு மாறாகத் தாயினால் திருமணத்திற்கு வற்புறத்தப்படும் ஒரு மாணவியும், தனது தனிமைக்கும் நாய்க்குட்டியின் மீதான தனது நேசத்துக்கும் தன்னைப் பலிதரும் ஒரு சின்னுஞ்சிறு சிறுமியும் இருக்கிறார்கள். சிறுமி வல்லுறவுக்குப் பலியாகிறாள். சமப்பாலுறவுத் தோழன் தனது காதலனின் துரோகத்தினால் தற்கொலை செய்து கொள்கிறான். தனது சொந்தச் சமப்பாலுறவுத் தேர்வு மறுக்கப்பட்டுத் தகப்பனால் செலுத்தப்பட்ட இளைஞனும், திருமணத்திற்கு வற்புறத்தப்படும் மாணவியும் தமது பெற்றோரைக் கொல்லவேண்டும் எனும் உணர்வை அடைகிறார்கள்.
அதற்கான கொலை ஆயதங்களும் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சூழல் கனடியத் தமிழ் சமூகத்தினுள் நிலவுகிறது.
உள்நாட்டுப் போரும், இழப்பும், உறவுச்சிதறலும் தொடரும் வன்முறை உளவியலும் ஈழத் தமிழ் சமூகத்திற்கு மட்டுமே உரியதல்ல. மேற்கு நாடுகளுக்கும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்த சூடான், குர்திஸ், பஞ்சாப், எதியோப்பியா, காஷ்மீர் போன்ற பிரதேசங்களின் மக்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஈழத்தில் உறவுகளைப் பறிகொடுத்த, விமான நிலையத்தில் தவிக்கவிடப்பட்ட தமிழ்ப் பெண் இந்த வகையில்தான் சூடானில் தன் உறவுகளைப் பறிகொடுத்த ஆப்ரிக்க மனிதர் ஒருவரிடம் அன்பையும் ஆதுரத்தையும் நேசத்தையும் பெறமுடிகிறது.
குழந்தைகள் வளர்வதற்கு ஈழம் மட்டுமே ஆபத்தான இடமாக இல்லை@ கனடாவும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் கூடத்தான் ஆபத்தான நாடுகளாக இருக்கின்றன. குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்கள் இங்கு மிகப் பெறும் சமூகப் பிரச்சினையாக இருக்கிறார்கள். இந்த நிலைமையில் குழந்தைகளின் மீதான அதிகவனம் புகலிடத் தமிழ்ப் பெற்றோர்களுக்குத் தேவையாக இருக்கிறது. பல குழந்தைகளை ஏற்கனவே வல்லுறவுக்கு உட்படுத்தியவனைக் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிப்பதற்குத் திட்டமிடும் போலீஸ் அதிகாரி, குற்றவாளியைத் தொடர்கையில் அவன் தவறவிடுகிற சில நிமிடங்கள் குழந்தையின் மரணத்தில் முடிகிறது. குற்றவாளி சுட்டுக் கொல்லப்படுகிறான். என்றாலும் குழந்தையைத் தான் காப்பாற்ற முடியாது போனது அவனுள் குற்றவுணர்வை விதைக்கிறது. குழந்தையின் தந்தையிடம் தனது அந்தரநிலையைச் சொல்லி அவரிடம் மன்னிப்புக் கோருகிறான் போலீஸ் அதிகாரி.
'குற்றவாளியைத் திட்டமிட்டு ஆதாரத்துடன் பிடித்துக் கொன்றதால் இன்று பல கனடியக் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். உனது முடிவும் உனது மனசாட்சியும் தெளிவாக இருக்கிறது என்றால் எது குறித்தும் நீ வருந்த வேண்டியதில்லை' என்கிறார் தகப்பன். இது ஒரு தந்தையின் தரிசனம். தனது சொந்த மகளைக் கணவனுடன் போகவிட்டுப் பிற குழந்தைகளுக்காகவே நாட்டில் தங்கிப் பணியாற்றிய மனைவி வெள்ளை வான் கடத்தல்காரர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சூழலை மனச்சமநிலையுடன் ஏற்கும் ஓரு பொறுப்புள்ள தந்தையின், கணவனின், சமூகத் தலைவனின் துயரார்ந்த தரிசனம் இது.
வல்லுறவுக்கு உட்பட்டுக் கொல்லப்படும் குழந்தையின் தகப்பனே திரைப்படத்தின் மையமான கதாபாத்திரம். இவர் கனடாவில் வாழும் சமூகத்தில் தோன்றும் பெரும்பாலுமான குடும்பப் பிரச்சினைகளைச் செவிடுமடுத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும், முடிந்தால் உதவிகள் செய்துதரும் சமூகப் பெரியவர். ஓரு வகையில் கதைசொல்பராக இயக்குனரின் பிரதித் 'தான்' இவர்தான்.
தனது மனைவியைப் பிறிதொருவனுக்கு விட்டுக் கொடுக்க நேரும் முன்னாள் போராளியும், அவனிடம் தகவல் பெற்று அவனது சகதோழர்கள் அறுவரைப் படுகொலை செய்த போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியும் சமூகப் பெரியவரைச் சந்திக்கும் வேளையில்தான் மறுபடி இடைவெட்டிக் கொள்கிறார்கள். பிறிதொருவனோடு வாழப்போய்விட்ட மனைவியின் பிரிவைத் தாங்கமாட்டாத முன்னாள் போராளி அவளைத் தனடனுடன் சேர்த்து வைக்குமாறு சமூகப் பெரியவரிடம் இறைஞ்சுகிறான்; தமிழ் சமூகத்தில் யாரும் தன்னை மதிக்க மாட்டேனென்கிறார்கள் என்கிறான் அவன். இந்நிலைமை புகலிட நாடுகளில் எவருக்கும் வருவதுதான் என்கிறார் பெரியவர். அவன் அவரிடமிருந்து நகர, தற்கொலை செய்து கொண்ட வாலிபனின் தகப்பனைப் பார்க்கிறார் பெரியவர். வாலிபனின் தாயார் அரற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறான் தகப்பன். தாய் என்றால் அப்படித்தான் என்கிறார் பெரியவர். அத்தருணத்தில் தன்னை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியவன், போராளிக் குழவின் இரண்டாம் நிலைத்தளபதி, ஆதாரத்தில் இந்தத் தகப்பன்தான் என்பதை முன்னாள் போராளி இளைஞன் அடையாளம் காண்கிறான்.
தனது மனைவியைக் கொல்வதற்காகத் துப்பாக்கியொன்றினை விலைக்குப் பெற முயன்று கொணடிருந்த போராளி, இப்போது இத்தனை இழிவுக்கும் காரணமான போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத்தளபதியைக் கொல்ல முடிவெடுக்கிறான்.
துப்பாக்கியைத் தேடித்திரிகிறான். துப்பாக்கி;க்காக இவனிடம் தொகை பெற்றவன் இவனை ஏமாற்றுகிறான். தொடர்ந்து நடந்த கைகலப்பில் நையப்புடைக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டுக் கடற்கரையோரத்தில் வீசுப்படுகிறான். அவன் கண்விழிக்கும்போது அவனுக்குக் கடற்கரை மணலில் சிறிய விநாயகர் விக்கிரகத்துடன் ஒரு கழுத்துச்சங்கிலி கிடைக்கிறது. அதனை எடுத்துப் புரட்டுகையில் வானத்திலிருந்து ஒரு துப்பாக்கி அவனருகில் வநது வீழ்கிறது. விநாயகர் அனுக்கிரகமும் துப்பாக்கியும் அவனுக்குச் சமநேரத்தில் கிடைக்கிறது. இது கடவுளின் செயல் என அவன் கருதுகிறான். அந்தத் துப்பாக்கி நிஜத்தில் சிறுமியை வல்லுறவு புரிந்தவன் காவல்துறையினரின் எச்சரிக்கையை அடுத்து கடற்கரைப் பாறைமேலிருந்து கீழேயெறிந்த துப்பாக்கி.
தன்னை விசாரணை செய்து தனது ஆறு சகபோராளிகளைக் கொன்றவனைத் தேடி வருகிறான் போராளி. தாங்கள் குறிப்பிட்ட முகாமில் இருந்து தப்பிப்போவது தொடர்பான தகவல், பிறிதொரு இயக்கத்தைச் சேர்ந்தவனான இரண்டாம் நிலைத்தளபதிக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கிறான் அவன். 'நீ தான் சொன்னாய்' என்கிறார் அவர். 'பிறரைச் சித்திரவதை செய்து மிரட்டிக் கேட்டும் எவரும் சொல்லவில்லை. உன்னைச் சாதாரணமாகக் கேட்கவே எல்லாவற்றையும் கொட்டிவிட்டாய். நீ தான் உனது எல்லாத் தோழர்களையும் காட்டிக் கொடுத்தாய். முகாமிலிருந்து இந்த நாளில் இந்த நேரத்திற்குத் தப்பி இன்னொரு இயக்கத்தின் முகாமுக்குப் போகப்போவதாகச் சொன்னது நீதான். உனது சக தோழர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதற்கு நீதான் காரணம். உனது இன்றைய நிலைக்கும் நீதான் காரணம். நான் காரணமில்லை. எனது இயக்கத் தலைமையின் கட்டளையையே நான் நிறைவேற்றினேன்' என்கிறார். 'ஏன் அவர்களை சுட்டுக் கொல்லாமல், கத்தியால் வெட்டிக் கொல்லாமல், அடித்தே கொன்றாய்' எனக் கேட்கிறான்; போராளி. 'முகாம் இருந்த இடம் இந்தியா. துப்பாக்கி சத்தம் கேட்டால் அருகிலுள்ள கிராமத்தவருக்குத் தெரிந்துவிடும்; கத்தியைக் கண்டால் எனக்குப் பயம். ஆகவேதான் அடித்தே கொன்றேன்' என்கிறான் துணைத் தளபதி.
இந்தத் துணைத் தளபதியின் மகன்தான் தற்கொலை செய்து கொண்ட இளைஞன். தனது சமப்பாலுறவுக் காதலன் அவனது தந்தையின் விருப்பப்படி ஒரு இளம்பெண்ணை மணம்முடிக்க இருப்பதை அறிந்த நிலையில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். தனது சொந்த மகனது தற்கொலை, கொலகளைத் தொழிலாகச் செய்த அவனது தந்தையிடம் எந்தவிதமான ஆழ்ந்த உணர்வையும் எழுப்பவில்லை. அவனது தாய் மனம்பேதலித்தவளாக ஆகிறாள். அவளது துக்கத்தை கொலைகாரத் தகப்பன் பொருட்படுத்துவதுமில்லை.
தனது வாழ்வைத் திசைமாறிப் போகச்செய்யத் துணைத்தளபதியைத் தேடிவரும் போராளி பதட்டமாயிருக்கும் தருணமொன்றில் தனது துப்பாக்கியைத் துணைத்தளபதியிடம் பறிகொடுக்கிறான். மண்டை பிளக்கப்பட்டவனாக நாற்காலியில் சரிகிறான். இதனைக் கண்ணுற்றுக் குழறும் தனது மனைவியையும் துணத்தளபதி கொடூரமாக அடித்துக் கொலை செய்கிறான். இவரைத் தேடி வருகிறான் இவரது மகனின் சமப்பாலுறவுக் காதலன். தனது காதலனின் மரணத்திற்குக் காரணமான தனது தந்தைகை; கொன்றுவிட அவன் விரும்புகிறான். தற்கொலைக்குக் காரணம் தனது தந்தையே எனவும் அவன் சொல்கிறான். கொல்லப்படுக் கிடப்பவர்களை எந்த அதிர்ச்சியுமற்றுப் பார்த்திருக்கும் அவனிடம் அவனது தந்தையைக் கொல்ல துப்பாக்கியைக் கொடுத்தனுப்புகிறான் துணைத்தளபதி.
மேற்கத்திய நாடுகளிலும் வட அமெரி;க்காவிலும் வாழும் புகலிட ஈழத் தமிழ்சமூகத்தினுள் நிகழும் குழு வன்முறைக் காரணங்களை சமூகவியல் ஆய்வுகளின் மூலம், புலனாய்வுகளின் மூலம் ஒருவர் கண்டடையமுடியும். இதற்குப் பின்னான குழு உளவியலையும் ஒருவர் அவதானிக்க முடியும்.
குழு வன்முறைகளில் ஈடுபடும் அல்லது கொல்லப்படும் தனிநபர்களின் உளவியல் வரலாற்றையும், குழுக்கள் அல்லாது குடும்பங்களாக வாழும் தனிமனிதர்களின் தற்கொலை, படுகொலை போன்றவற்றின் உளவியல் வரலாற்றை அறிதல் எவ்வாறு சாத்தியம்? இதனை உளவியல் பிரபஞ்சம் குறித்த தேடல் என்று நாம் வரையறுக்கலாம். தம் சகமனிதர்க்கிடையிலான வன்முறையின் காரணங்கள் குறித்து இவ்வாறு தேடிச் செல்பவர்கள் அந்தந்த சமூகத்தின் கலைஞர்கள்தான். தற்கொலை, படுகொலை, குழந்தையின் தனிமை, வல்லுறவு, பிறிதொரு தலைமுறையினரிடம் தோன்றும் கொலையுணர்வு என லெனின் சிவம் சித்தரிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் உழலும் மனிதர்களின், பாத்திரங்களின் உளவியல் பரிமாணங்களை மிக நேர்த்தியாக அவர் சித்தரித்திருக்கிறார்.
வன்முறை உளவியல் உருவாக்கத்திற்கான அழுத்தமான வரலாற்றுக் காரணங்களை படம் பதிவு செய்திருக்கிறது. சிறுமியின் கொலை தனது கவனமின்மையால்தான் நிகழ்ந்தது எனக் குற்றவுணர்வு கொள்ளும் காவல்துறை அதிகாரிக்கும் தனது முறிந்த காதல் எனும் உளவியல் பிரச்சினை இருக்கிறது.
நாவலின் அத்தியாயம் போல முடிவு, இடைநிலை, முடிவுக்கான காரணம் தேடிய ஆரம்பம், அறுதி முடிவு எனப் படம் கட்டமைக்கப்படுகிறது. தற்கொலை, காதல்முறிவு, படுகொலை, கைவிடுதல் என வன்முறையின் பல்வேறு பரிமாணங்களில் துவங்கும் படம், ஒரு தளத்தில் காவல்துறையதிகாரி குற்றவுணர்விலிருந்து விடுபடுதல், விமானநிலையத்தில் கைவிடப்பட்ட ஈழ இளம்பெண் சூடான் அகதித் தோழனிடம் ஆறுதலைக் கண்டடைதல், தனது பிஞ்சுமகளைப் பறிகொடுத்த தகப்பனின் சுய ஆற்றுதல் என முடிகிறது. இன்னொரு தளத்தல், தனது சமப்பாலுறவுக் காதலனின் தற்கொலைக்குக் காரணமான தனது தந்தையைக் கொல்லத்தேடிச் செல்லும் தனையனையும், மனைவி மற்றும் போராளி என இருவரையும் அடித்துக் கொன்றபின் சமநிலையில் சாதாரணமான மனிதனாக இனியும் தமிழ் சமூகத்தினுள் நடமாடப் போகும் துணைத்தளபதியையும் திறந்த நிலையில் படம் நமக்கு முன் விட்டுச் செல்கிறது.
லெனின் சிவத்தின் இப்படத்தை போருக்குப் பின்னான படம் அல்லது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான படம் எனச் சொல்லலாம். அசோக ஹந்தஹமாவின் 'இனி அவன்', பிரசன்ன விதானகேவின் 'வித் யு வித்த அவ்ட் யு' போன்ற படங்களுடன் சேர்த்துப் பார்க்கலாம். வரலாற்றையும் ரணங்களையும், அது தனிமனிதர்களின் மீது செலுத்திய பாதிப்புகளையும், அதனது விளைவான மனப்பிறழ்வுகளையும் எவரும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. மறந்துவிடவோ அல்லது மறுத்துவிடவோ முடியாது. குற்றவுணர்வில்லாத மனிதன் மீட்சி பெற முடியாது. ஆற்றுதல் இல்லாத மனிதன் அமைதி கொள்ள முடியாது. குற்றவுணர்வு கொண்ட மனிதன் தன்னைத் திறந்து கொள்கையில், பாதிப்புப்பெற்ற மனிதனுக்கு ஆறதல் தருகையில் மனிதன் அமைதி பெறுகிறான்.
விமாநிலையத்தல் கைவிடப்பட்ட பெண்ணும், தனது பிஞ்சுமகளைப் பறிகொடுத்த சமூகப் பெரியவரும், சிறுமியின் மரணத்திற்குத தான் காரணமோ எனத் துயருரும் காவல்துறை அதிகாரியும் இத்தகைய மனிதர்கள். தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள், தமது பிரச்சினைகளின் காரணமாகப் பிறரைக் காண்பவர்கள் ஒரு போதும் வன்முறையிலிருந்து மீள்வதில்லை. தந்தையைக் கொல்லத்தேடிச் செல்லும் சமப்பாலுறவு இளைஞனும், ஆறு போராளிகள் அதனோடு தன் மனைவி என இவர்கள் அனைவரையும் அடித்தே கொன்று இயல்பான இன்பம் காணும் துணைத்தளபதியும் இன்னொரு கொலை நிகழும் தருணம் வரையிலும் அடையாளம் காணமுடியாதவர்கள் அல்லது ஒரு போதும் அடையாளம் காணப்பட முடியாதவர்கள்.
இவ்வாறு இரண்டு நிலையிலும் சமூகத்தினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது லெனின் சிவத்தின் ஒரு 'துப்பாக்கியும் ஒரு மோதிரமும்' திரைப்படம்.
மிகநேர்த்தயான திரைக்கதை மற்றும் வசனங்களையும், குறிப்பாக விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பெண், மனம்பிறழ்ந்த போராளி, கொலைகளை இயல்பாக ஆக்கிக் கொண்ட துணைத்தளபதி, தமிழ் சமூகப் பெரியவர், காவல்துறையதிகாரி எனத் தேர்ந்த நடிகர் நடிகையரையும், பொருத்தமான இசையமைப்பையும், கச்சிதான தலைப்புப் பாடலையும் கொண்ட இத்திரைப்படம், படத்தின் இறுதிக்காட்சியாக தேய்வழக்கொன்றையும், எந்தச் சாதாரணத் திலைப்படப் பார்வையாளனும் யூகிக்கக் கூடிய காட்சியொன்றினையும், அந்தப் பாத்திரப்படைப்பின் பரிமாணம் குறித்த விளக்கமின்மையையும் கொண்டிருக்கிறது.
திரைப்படத்தின் முதல் சட்டகமும் இறுதிச் சட்டகமும் எப்போதுமே பார்வையாளன் மீது மிகப்பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. காத்திரமான முதல் சட்டகம் அல்லது முதல் சில நிமிடங்கள் தாம் எந்தவிதமான உலகத்தில் நுழையப்போகிறோம் என்பதைக் கோடிகாட்டி உடனடியாகப் பார்வையாளனைத் திரைப்படம் தனக்குள் எடுத்துக் கொள்கிறது. காத்திரான இறுதிச் சட்டகம் அல்லது இறுதி விநாடிகள் பார்வையாளனைக குதூகலப்படச் செய்கிறது அல்லது ஆழ்ந்த துக்கத்தை எழுப்புகிறது அல்லது மீளமுடியாத ஒரு அவஸ்தையை அவனுக்குள் செலுத்துகிறது அல்லது எழுச்சிபெற்ற மூளையுடன் அவனைச் செல்லுமிடம் செலுத்துகிறது.
திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியான போராளி மீதான துணைத் தளபதியின் விசாரணையும், யாழ் நகரத்தில் உருளும் பீரங்கி வண்டியொன்றின் சக்கரங்களின் சத்தத்தினிடையில் நிகழும் படுகொலைகளும் வன்முறையும் முழுப் படத்திற்கான அதியற்புதமான முன்னுரையாக அமைந்திருக்கின்றது. இறுதிக் காட்சியில் எவரும் எதிர்பார்த்திருக்கிற மாதிரி விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஈழத்து அகதிப்பெண்ணை சூடான் நாட்டின் பாதிக்கப்பட்ட அகதி ஆண் மோதிரம் அணிவித்துக் கரம் பிடிக்கிறார். ஆற்றிலிருந்து காமெரா ஆகாயத்திற்கு எழுகிறது. மிக மிகச் சாதாரணமான மனோரதியமானதொரு முடிவுக் காட்சி;யாக இது இருக்கிறது. இன்னும், முன்னொரு காட்சியில் இருக்கிறவாறு தன்னை விமானநிலையத்தில் கைவிட்டவனை நிராகரித்துத் தனக்காகத் தொலைவில் காத்திருக்கும் சூடான் அகதி நண்பனுடன் அப்பெண் நடக்கத் துவங்கும் போதே அப்பெண் விடுதலை பெற்றுவிட்டாள். அவளது கதையும் முடிவுபெற்றுவிட்டது.
இதனோடு, அப்பெண்ணை விமாநிலையத்தில் கைவிட்டமைக்கான காரணம் கடைசிவரையிலும் திரைப்படத்தில் பார்வையாளனுக்குச் சொல்லப்படவேயில்லை. இந்த மயக்கங்களும் தயக்கங்களும் தேய்வழக்கும் இந்தக் காட்சியைக் காத்திரமான இறுதிக் காட்சியாகக் கொள்வதினின்று பார்வையாளனை விலக்கி விடுகிறது.
இதற்கு மாறாக, இதற்கு முன்னான காட்சி எவ்வளவு முன்னுணர முடியாததாக, எதிர்பார்த்திருக்கவே முடியாததாக, அதியற்புதமான மானுட தரிசனமொன்றைத் தருகிறது என்று ஒரு பார்வையாளனாக நினைத்துப் பார்க்க முடிகிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் மரணத்திற்குத் தான் காரணமாகி விடடடோமோ எனும் குற்றவுணர்வில் அவளது தந்தையிட்ம் மன்னிப்புக் கோரவருகிறான் ஒரு காவல்துறையதிகாரி. இது அசாதாரணமானதொரு நிகழ்வு. இதனைத் தொடர்ந்து, பிற குழந்தைகளின் பொருட்டு தனது குழந்தையைத் தவறவிட்டு மரணமுற்ற மனைவியின் மறைவு தரும் துயருடன், தனது குழந்தையின் மரணத்தின் பின் பிற குழந்தைகள் பாதுகாப்பாயிருக்கிறார்கள் எனத் தன்துயiரைப் பிறர் துயரின் முடிவாகக் காணும் தகப்பன், தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவனைத் தேற்றி அனுப்பும் தரிசனம் இன்னொரு அசாதரணமான நிகழ்வு.
இதுவே படத்தின் இறுதிக் காட்சியாக இருந்திருக்க வேண்டும் என நினைக் முடிகிறது.
இப்படியான அசாதரணமான தருணங்கள் படம் முழுக்க விரவியிருக்கிறது. தனது மனைவியைக் கொலை செய்ய துப்பாக்கி தேடித்திரியும் போராளிக்கு கடற்கரை மணலில் விநாயகர் விக்கிரகக் கழுத்தணியும், வானத்திலிருந்து வீழும் துப்பாக்கியும் கிடைக்கும்போது அப்பாத்திராமாக நடித்த பிரான்ஸ் பாஸ்கரின் உடல்மொழி மற்றும் முகபாவனை, பிற்பாடாகத் தான் கொல்வதற்காகத் தேடிப்போகும் துணைத்தளபதியிடம் துப்பாக்கி எனக்குக் கடவுள் கொடுத்தது எனச் சொல்லும்போது தோன்றும் உன்மத்த மனநிலைப் பிரதிபலிப்பு என அற்புதமான தருணங்கள் கொண்டது ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் திரைப்படம்.
லெனின் சிவம் இதுவரையிலும் '1999' மற்றும் 'ஒரு மோதிரமும் ஒரு துப்பாக்கியும்' என இரு முழுநீளக் கதைப்படங்களையும், சில குறும்படங்களையும் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்தினதும் பொதுவான அம்சங்கள் என நான் சிலவற்றைக் குறிப்பிட முடியும்; : முதலாவதாக, புகலிட ஈழத்தமிழ் சமூகத்தின் வன்முறை உளவியலுக்கான வேர்களை இவரது படங்கள் தேடிச் செல்கின்றன. தான் சார்ந்த சமூகத்தின் மனிதர்களை நேசிப்பவராகத் தனிமனிதர்களின் மீதான ஆழ்ந்த பரிவுடன் இதற்கான வேர்களை அவர் வரலாற்றுக் காரணங்களில் காண்கிறார். இரண்டாவதாக, புகலிட ஈழத் தமிழ் சினிமாவைப் இன்று நோய் போலப் பீடித்திருக்கிற கோலிவுட் மரபை அதனது சந்தைசார்ந்த வேட்கையைத் தனது கதைசொல்லலில், பாணியில் அவர் முற்றிலும் நிராகரித்து, ஈழத்தமிழ் சினிமாவுக்கே உரிய அசலான, தனித்துவமான மரபொன்றினை உருவாக்குவதில் அவர் பயணப்பட்டிருக்கிறார். இது அவர் மேற்கொண்டிருக்கும் பெருமிதப்படத்தக்க பயணம்.
இந்தப் பயணத்தில் அவருக்கு விஷ்ணு முரளி போன்று இன்னும் இன்னும் தயாரிப்பாளர்கள் அமையவேண்டும் என்பதுதான் விமர்சகனாக இன்று எனது வேண்டுதலாக இருக்கின்றது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|