[ அமரர் ஏ.ஜே.கனகரத்னாவின் நினைவு தினம் அக்டோபர் 11. அதனையொட்டி 'பதிவுகள்' இதழ் 38இல் (பெப்ருவரி 2003) வெளியான யமுனா ராஜேந்திரனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் - ]
(1). மத்து : மித்ர: சென்னை: மறுபிரசுரம் : டிசம்பர் 2000. (2). மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள் : அலை வெளியீடு : யாழ்ப்பாணம் 1981. (3). செங்காவலர் தலைவர் யேசுநாதர் : மித்ர : சென்னை : டிசம்பர் 2000
அக்டோபர் புரட்சி தொடங்கி இரண்டாயிரமாண்டு இறுதிவரையிலான ஆண்டுகள் , உலகின் மிகப்பெரிய வரலாற்று உற்பவங்களுக்குச் சாட்சியமாக இருக்கிறது. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சியும், அதைத் தொடர்ந்து சமவேளையில் முதலாளித்துவத்துக்கும், அதிகாரவர்க்க சோசலிசத்திற்கும் எதிரான கலாச்சார விமர்சகர்களும் படைப்பாளிகளும் தோன்றினர் இலக்கியவாதியான ஸார்த்தர், கோட்பாட்டாளரான மார்க்யூஸ், உளவியல் ஆய்வாளரான எரிக் பிராம், பொருளியலாளரான கென்னத் கால்பிரெய்த் போன்றவர்கள் அக்கால கட்டத்தில் முக்கியமான சிந்தனையாளர்களாக இருந்தனர். எண்பதுகள் அதிகார வர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியும், தேசிய இன எழுச்சிகளின் உச்சபட்ச வீச்சும் நிகழ்ந்த ஆண்டுகளாகின. இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலக முதலாளித்துவம், ‘உலகமயமாதல்’ எனும் புதிய பெயராகியிருக்கிறது. சோசலிசத்தினதும் இடதுசாரிக் கோட்பாட்டினதும் கோஷங்களை இன்று மதவழிப்பெருந்தேசியம் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது. இனக்குழுக்களுக்கிடையிலான போர்களும், விளிம்பு நிலை மக்களுடைய வேட்கைகளும், பெண்விடுதலை குறித்த பிரக்ஞையும் எமது நாடுகளில் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. ஏ.ஜேயின் எழுத்துக்கள் இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்த அறிவுத்துறை நடவடிக்கைகளைத் தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறது. வரலாற்று உற்பவங்களுக்கு ஆதாரமாகவிருந்த, உலகைக் குலுக்கிய முக்கியமான புத்தகங்கள், தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்க்சீய அழகியல் தொடர்பான விவாதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நு¡ற்றாண்டு அறிவுப் பரப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அறிமுகம் கொள்ள நினைக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே நாம் ஏ.ஜே.யின் எழுத்துக்களைப் பரிந்துரைக்கமுடியும்.
நமது ஆதாரமான உயிரியல் சார்ந்த வாழ்வைப் புரிந்து கொள்வதில், நமது இருத்தலுக்கு அர்த்தம் தேடும் சமூக ரீதியிலான பெளதிக வாழ்வைப் புரிந்து கொள்வதில், நமக்கு முன்னால் மிகப் பல அடிப்படைக் கேள்விகள் இருக்கிறது. உளவியல் நமது உடல் சார்ந்த உயிரியல் அர்த்தங்களை விசாரித்ததெனில், மார்க்சீயம் நமது சமூக இருப்பு சார்ந்த பெளதிக இருத்தல் சார்ந்த அர்த்தங்களுக்குப் பதிலிறுப்பதாக அமைந்தது. இயற்கைக்கும் சமூக மனிதனுக்கும் அவனது சிருஷ்டிக்கும் இருக்கும் உறவுகளைப் புரிந்து கொள்வதில் நாம் தொலைது¡ரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். வெறும் பொருளியல் ரீதியிலான அணுகுமுறைகள் மனிதனை இயந்திரமாகப் புரிந்து கொள்ளத் தலைப்பட்டபோது, உளவியலின் தேவையை நாம் அறிந்து கொண்டோம். உளவியல் மனிதனைச் சுற்றிய ஒரு சிறையாக ஆனபோது, உளவியலின் சார்பு நிலையைப் புரிந்து கொள்ள கலாச்சாரக் காரணிகளின் முக்கியத்தவத்தை அறிந்து கொண்டோம். கலாச்சாரக் காரணிகளைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முனைந்தபோது, மறுபடியும் நாம் உயிரியல் அடிப்படை சார்ந்த உயிர்க்கூற்றியல் ஆய்வுகளுக்கும், அரசியல் நிறுவனங்களின் தாக்கம் குறித்த ஆய்வுகளுக்கும் சென்றோம். மனிதனுக்கும் இயற்கைக்குமான இந்த இடையறாத லயமிக்க தேடலில், மாற்றமும் புதிய உண்மைகளும் சதா விளைந்து கொண்டே இருக்கிறது. இந்த லயத்தை உருவாக்கும் போக்கில் தான் மனிதன் அறவியலை உயர்த்திப்பிடிக்கிறான்.. லெனின் இதைத்தான் எதிர்காலத்தின் அழகியல் அறவியல் என்றான். பாசிசத்துக்கும் அதிகாரவர்க்க சோசலிச ஒடுக்குமுறைக்கும், இனக்கொலைக்கும் சுரண்டலுக்கும் எதிராக, இது காரணம் கொண்டுதான் மனிதன் எதிர்ப்புத் தெரிவிக்கிறவனாக இருக்கிறான். இந்த இயற்கைக்கும் மனிதனுக்குமான லயத்தையும், அவனது எதிர்ப்புணர்வையும், அவனது அழகுணர்வையும் இணைக்கும் அறிவார்ந்த அணுகுமுறையைத்தான், நாம் பல்துறைசார் அணுகுமுறை என்கிறோம். இந்த பல்துறைசார் அணுகுமுறையின் மூலமாக உலகைக் குறித்த ஒரு புரிதலை நாம் எட்டமுடிகிறது. மனிதனின் அன்னிமாதலை, இந்தச் சுயஉணர்தல் தான் கொஞ்சமேனும் அகற்றுவதாக இருக்கிறது.
எழுபதாம் ஆண்டு வெளியான ‘மத்து’ தொகுப்பில் பதினோரு புத்தக அறிமுகங்கள் இடம் பெறுகின்றன. புதிய இடதுசாரிகளிடம் மரியாதை கொண்ட அமெரிக்கப் பொருளியலாளர் கென்னத் கால்பிரெய்த், யூகோஸ்லாவிய மார்க்சீயர் டிஜிலாஸ் பற்றிய பொருளியல் அரசியல் கட்டுரைகளோடு பிரித்தானிய யாப்பின் வர்க்கத்தன்மை பற்றிய கிரீவ்ஸின் கட்டுரையும் இடம் பெறுகிறது. இன்றைய தினம் அதிகரித்து வரும் மரபணு ஆராய்ச்சி, சூழலியல் மாசுக் கேடு போன்றவற்றை ஆராயும் முன்னோடிக் கட்டுரைகளாக, மருந்நுகள் வைத்தியர்கள் நோய்கள் எனும் பிரையன் இங்கிலீஷின் புத்தகம் குறித்த அறிமுகமும், பூச்சிக் கொல்லி மருந்நு பற்றிய ரேச்சல் கார்ஸன் பற்றிய கட்டரையும் இடம் பெறுகிறது. பிராய்டியக் கோட்பாட்டின் சமூக வர்க்கப் பின்புலத்தைப் பேசுகிறது இயான் ஸட்டிலின் புத்தகம் குறித்த கட்டுரை. ஆங்கில மொழி உலக மேலாண்மை பெற்றதின் வரலாற்றையும் அமெரிக்க இலக்கியத்தின் மீது ஆங்கில இலக்கியத்தின் செல்வாக்கு பற்றியும் பேசும் இரண்டு கட்டுரைகளில் இரண்டாம் கட்டுரை அமெரிக்க தேசிய இலக்கியம் குறித்த விவாதங்களைத் தொடுக்கிறது. ஆயிரமுக வீரன், அரசு என இரு கட்டுரைகள் நவீன வாழ்வில் புராணங்கள் பெறும் சமூகப் பெறுமானம் குறித்த கேள்விகளை எழுப்புகிறன. சினிமா எனும் கலை ஊடகம் குறித்த கோட்பாட்டு ரீதியலான சர்ச்சைகளை, திரைப்படம் கோட்பாட்டுக் கொத்து எனும் கட்டுரை பதிவு செய்கிறது. எண்பதுகளில் வெளியான மார்க்சியமும் இலக்கியமும் நூல் முழுக்கவும் மார்க்சிய கலை இலக்கிய அழகியல் குறித்த பிரச்சனைளை, ரஷ்யப் புரட்சிக் காலகட்டத்தில் நடைபெற்ற விவாதங்களைத் தொகுத்துக் கொண்டு பேசுகிறது. மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் ஒரு அசலான கட்டுரையும் அடங்கியது இந்நூல். கட்சி இலக்கியம், மனிதப் பண்பாட்டை உருவாக்கும் கலாசிருஷ்டி, இலக்கிய உடன் பயணிகள், சோசலிச யதார்த்தவாதம், நவீனத்தவ சோதனைகள் போன்ற பிரச்சினைகளை லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின் போன்ற அரசியலாளர்களும், லு¡னாசார்ஸ்கி போன்ற இலக்கிய விமர்சகர்களும், கார்க்கி மாயக்காவ்ஸ்கி போன்ற படைப்பாளிகளும் எவ்வாறு அணுகினார்கள் எனும் கட்டுரை அலன் ஸ்விஞ்ச வுட்டினுடையது. சோசலிச யதார்த்த இலக்கிய வகையினத்தை மரபார்ந்த ஐரோப்பிய மதிப்பீடுகளிலான இலக்கிய வகையினத்துடன் வைத்துப் பேசுவதிலுள்ள பிரச்சினையை கேரி சொல் மார்சனும், உருவமும் உள்ளடக்கமும் குறித்து சமுத்ரனுக்குப் பதிலான மொழியாக்கக் கட்டுரையை ரெஜி சிறிவர்த்தனாவும் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரைகளின் அடிப்படையில் நிலவிய மார்க்சிய இலக்கிய விமர்சனம் குறித்த தனது குறிப்புகளை மார்க்சியமும் இலக்கியமும் என கனகரத்னா பதிந்திருக்கிறார். இரண்டாயிரமாண்டு இறுதியில் வெளியாகியிருக்கும் செங்காவலர் தலைவர் யேசுநாதர் எனும் நு¡லில் முதல் இரண்டு நு¡ல்களிலும் தான் ஸ்வீகரித்துக் கொண்ட கோட்பாட்டுச் சேகரத்தின் அடிப்படையிலானதும், அசலானதும் ஆன, நாவல் சிறுகதைத் தொகுப்பு விமர்சனங்கள், சினிமா விமர்சனங்கள் என பெரும்பாலுமான கட்டுரைகள் அமைகின்றன. திரைப்பட இயக்குனர்கள் கவிஞர்கள் போன்றவர்களின் நேர்முகங்களும் கடிதங்களும் கட்டுரைகளும் மொழியாக்கங்களாக இடம் பெறுகின்றன.
கனகரத்னாவின் அக்கறைகள் சஞ்சரிக்கும் தளங்களென பிரதானமாக இரண்டு பிரதேசங்களைக் குறிப்பிடலாம்: (1). ஜனநாயகபூர்வமான அரசியல் அழகியல் அமைதி கொண்ட ஒரு மாற்றுச் சமூக அமைப்பை மார்க்சீயக் கருத்தியலின் வழி உருவாக்கும் செயற்போக்கில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியது. (2). அவர் முன்னோடியாக இருந்த யாழ் பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் நெறியாளராக, திரைப்படம் பற்றிப் புரிந்து கொள்ளலும் அறிவித்தலும் என்கிற பாங்கில் வெளியான அவரது திரைப்படம் பற்றிய எழுத்துக்களாகும். கனகரத்னாவின் தேட்டம் சமாந்தரமாக மூன்று வகைகளில் இயங்குகிறது. புத்தகச் சுருக்கங்கள் மொழிபெயர்ப்புக்கள் என இடையறாத படிப்பிலிருந்து அவர் சமகாலச் சர்ச்சைகளிலிருந்து அறிவாதாரத்தைத் திரட்டிக் கொண்டு சக மனிதனோடு பகிர்ந்த கொள்வதைச் செய்யும் அதே வேளையில் தமிழ்ச் சூழலின் பிரச்சினைகளோடு அவைகளை ஒப்பு நோக்கி தொடர்ந்த விவாதிக்க்க கோருகிறார். தருணங்களில் தமிழில் வெளியான படைப்புக்களை முன்வைத்து தனது கோட்பாட்டுச் சேகரத்தை நடைமுறையில் சோதித்து நம்மிடம் பகிர்ந்த கொள்கிறார்.
முதலாளித்துவத்திற்கு எதிரான மாற்றுச் சமூக அமைப்பைச் சந்திக்கும் போது நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. நிலவும் முதலாளித்தவ சமூகத்தின் மேன்மைகளாகப் பிரச்சாரப்படுத்தப்படும் விஷயங்களின் போலி முகத்தை தரவுகளுடன் நாம் அம்பலப்படுத்த வேண்டும். இவ்வகையில் உற்பத்தி, போட்டி, சந்தை பற்றிய முதலாளியப் பிரமைகளை உடைக்க வேண்டியிருக்கிறது. நமது தானிய மற்றும் உணவு உற்பத்தினை பெறுக்குவதாகச் சொல்லப்படுகிற பூச்சுக் கொல்லி மருந்து, எவ்வாறாக நமது அடிப்படை உயிரணுக்களை பாதிக்க்க கூடியதாக இருக்கிறது என்பதில் தொடங்கி எவ்வாறாக பகாசுர மருந்துக் கம்பெனிகள் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சியைவிடவும் விளம்பரத்திற்காக பணத்தை முதலீடு செய்கிறது என அறிவுறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாளித்துவப் போட்டி என்பது எவ்வாறாக பொருட்களின் தரம் என்பதை இரண்டாம்பட்சமாக்கி, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களாகத் தம்மைத் திரட்டிக் கொள்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சிறுதொழில் முனைவோர் எனும் சுயதொழில் திட்டம் என்பது, எவ்வாறாகத் தாட்சர் வழியில் அமெரிக்க பகாசுர நிறுவனவழியில் தன்னைக் கட்டிக்காத்துக் கொள்ள முதலாளித்துவம் கண்டுபிடித்த சமரசத்திட்டம் என்பதை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. முதலாளித்துவம் நிராகரிக்கத்தக்கது என்பதும் அதனது சாதுரியங்கள் புதுப்புது வடிவங்களில் வரும் என்பதும் நமக்குத் தெரிந்திருக்கிறது.
சோசலிசத்தைக் கட்டுவதும் அதனது கலாச்சாரத்தைக் கட்டுவதும், அப்படியொன்றும் சாதாரணமான விஷயமாயிருக்கவில்லை. மனித குலம் தோன்றியதலிருந்து நமக்கு விடைகாணமுடிய நிறைக் கேள்விகள் நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன.. புராணங்களுக்கு என்ன அர்த்தம்? அதனது சமகாலப் பொறுத்தப்பாடு அல்லது மரபின் தேவை நவீன மனிதனுக்கு அவசியமா? மன்னன் சூரியன்- இயற்கையின் ஒழுங்கு- சமூக நிறுவனங்களின் ஒழுங்கு -அறவியலின் தேவை போன்றவை எல்லா சமூகங்களிலும் இருந்திருக்குமாயின் அன்றன்றிருந்த நம்பிக்கைகள் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இருந்த ஒத்திசைவகள் என்ன? மனிதனின் அகத்துக்கும் புறத்துக்கும் இருக்கும் உறவு உடலியல் ரீதியல் எத்தகையது? நினைவுகளும் படைப்பெழுச்சியும் காரணகாரிய அறிவும் மூளையின் செயலில் பெறும் இடம் என்ன? . உளவியல் பகுப்பாய்வுகளில் அவர்தம் கோட்பாட்டு அளவைகளில் கோட்பாட்டாளனின் வாழ்வுச் சூழலும் அவர்தம் மதிப்பீடுகளும் முற்சாய்வகளும் பெறும் இடம் என்ன? உளவியல் எனும் துறை பிற இயற்கை விஞ்ஞானங்கள் போன்றதா? கலாசசாரப்புரட்சி சோசலிசப் பண்பாடு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் புதிய மனிதனை உருவாக்கியதா? நமது நூற்றாண்டின் மிகப் பெரிய கலாச்சார ஊடகங்களாக இருக்கும் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவுகள் எத்தகையவை ? சோசலிச யதார்த்தவாதம் நவீனத்துவம் மாயா யதார்த்தவாதம் போன்ற விவாதங்களிலிருந்து நாம் இன்று தேர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியமான கோட்பாடாக இலக்கிய வகையினமாக இருப்பது என்ன? கனகரத்னாவின் எழுத்தக்கள் இத்தகைய இடையறாத தேடலில் கண்டபிடித்த கனிகள் என்று சொன்னால் மிகையில்லை.
கனகரத்னா எழுப்பிக் கொண்ட அதன் வழி தேடிய அன்றைய பதில்கள், கால ஓட்டத்தில் மாறுபட்டு வளர்ச்சி நிலையை எய்தியிருநதாலும் அவர் மொழியாக்கிய புத்தகங்களும் கட்டுரைகளும இன்றும் பொருத்தப்பாடுடையவைதான். கால்பிரைய்த் எழுப்பிய பொருளாதாரத்தை ஜனநாயகமயப்படுத்தலும் தனிநபரின் பங்கு பெறலும், எதிர்வினையும் குறித்த பிரச்சினைகளையே இன்று வேறு வகையில் அமர்த்யா ஸென் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். தனிநபரின் தேர்வுக்கான வாய்ப்பு, அரசியல் சுதந்திரம் போன்றவையை உத்தரவாதப்படுத்திய பொருளியல் சுபீட்சைத்தைக் கோரும் அவர், உலகமயமாதலை சகட்டு மேனிக்கு எதிர்ப்பதையும் நிராகரிக்கவே செய்கிறார். முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம் சார்ந்தவர்கள், உலகமயமாகும் மூலதனத்துக்கு ஏற்ப எதிர்ப்பியக்கமும் உலகமயமாகும் என்று வரையறை செய்கிறார்கள். திட்டமிடுதலிலும் மத்தியத்தவத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் சமவிகிதத்தில் அமர்த்யா ஸென் பரிந்துரை செய்கிறார். சீன சோவியத் யூனியன் போன்றவற்றின் அதிமத்தியத்துவப் பொருளாதாரத் திட்டமிடலை விமர்சிக்கும் அவர், நுகர்வில் தனிநபரின் தேர்வும் சுதந்திரமும் அற்று நிலவும், முதலாளித்தவ உற்பத்தி முறையையும் மறுதலிக்கவே செய்கிறார்.
மிலோவன் டீஜிலாஸ் எழுப்பிய அதிகாரவர்க்கம் குறித்த கேள்விகள் சோசலிசத்தினது பிரச்சினையாக மட்டமல்ல, புரட்சிக்குப் பிந்திய காலனிய எதிர்ப்பு தேசவிடுதலை சம்பந்தமான கேள்விகளாகவும், இன்று சமகால இனவிடுதலை புரட்சிகர இயக்கங்கள் பற்றிய கேள்வியாகவும் இருக்கிறது. அதைப் போலவே கட்சி இலக்கியம் குறித்த கேள்விகளும், பொதுவான மானுடப் பண்பாட்டை உருவாக்குதலை முன்னெடுப்பது தொடர்பான டிராட்ஸ்கி லெனின் வழி கேள்விகளும், இன்றளவும் மார்க்சியக் கட்சிகளிலும் புரட்சிகர இயக்கங்களிலும் விவாதத்திற்கு உரியதாகத்தான் இருக்கிறன. அன்று கலைஞர்கள் ஸ்டாலினால் ஸைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள். மாவோவின் கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் கலைஞர்கள் இசை மேதைகள் வேட்டையாடப்பட்டார்கள். குருப்ஸ்கயாவிடம் மாவோவிடம் மட்டமல்ல, இன்று வரை கியூபாவிலும் புரட்சிகர இயக்கங்களிலும் தடை செய்யப்பட்ட நூல்கள் திரைப்படங்களின் பட்டியல் மட்டமல்ல, கொலை செய்யப்பட்ட கலைஞர்களின் பட்டியலும் இருக்கிறது.
செவ்வியல் இலக்கியம், உன்னதம், பயிற்சி, நேர்த்தி, அழகியல் ஒருமை போன்ற மதிப்பிடுகளால் உருவாக்கப்பட்டது. ஆங்கில கலை இலக்கிய மதிப்பீடுகளும் சரி, செவ்வியல் இலக்கிய மதிப்பீடுகளும் சரி, அழகியல்மதிப்பிடுகளம் சரி, தரப்படுத்துதல் என்னும் கண்ணோட்டத்தினால் உருவாக்கப்பட்டது. காலனிய அறிவாளிகள் அதனால்தான் தென்னமெரிக்க கலைச் சின்னங்களை உருக்கி தங்கத தகடாக்கினார்கள். கோயில்களை இடித்தார்கள். ஆப்ரிக்க முகமூடிகளை எரித்தார்கள். தேர்ச்சியும் பயிற்சியும் கொண்ட பின் காலனிய சமூகங்களான நமது நாடுகளில் உருவான அறிவுஜீவி வர்க்கத்தவர்கள், நமது சமூகத்தின் மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆங்கில மொழிக்குப் பிரபுக்கள் எனில், இந்தியத் தமிழ் வாழ்வுக்கு பார்ப்பனியர்களும் மேட்டுக் குடியினரும் என வரையறுக்கலாம். தேர்ச்சி, பயிற்சி போன்றவைகளை வலியுறுத்தி, விளிம்புநிலை மக்களின் கலை இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களை நிராகரிக்கிறபோது, கடப்பாடுடைய இலக்கித்திற்கான வலியுறுத்தல் எழுகிறது.
சோசலிச யதார்த்தவாதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வாதப் பிரதிவாதங்கள் எழுந்த அதே வரலாற்றுச் சூழலில்தான், சோசலிச யதார்த்தவாதத்தை அந்தச் சமூக நிலைகளின் தேவையோடு புரிந்து கொள்ள வேண்டும் என்கிற கேர் சொல்மொசனின் பார்வையும் முன் வைக்கப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். மராட்டியத்தில் தலித் இலக்கியம் தோன்றிய போது உன்னத இலக்கியர்கள் அதை முற்றும் நிராகரித்த வரலாற்றை அர்ஜுன் தாங்ளே தான் தொகுத்த விஷம்பாரித்த ரொட்டி எனும் தொகுப்பு நூலில் நு¡லில் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழகத்திலும் தலித் விமர்சகர்கள் அழகியல் உன்னதர்களிடமிருந்து இதே எதிர்ப்புக்களை எதிர்கொண்டார்கள். சோசலிஷ யதார்த்தவாதம் பற்றிய விவாதங்களும் முடிவு பெற்றுவிடவில்லை. சமூகக் கடப்பாட்டை முன்னிறுத்திய இலக்கியம் தொடர்பான விவாதங்கள் எழும்போதெல்லாம், சோசலிஷ யதார்த்தவாதம் பற்றிய விவாதங்கள் வருகின்றன. இன்னும் மிகச் சமீபத்தில் தலித் இலக்கியம் பற்றிய விவாதங்களில்கூட சோசலிஷ யதார்த்தவாதம் குறித்த விமர்சனங்கள் இடம் பெற்றன. புதிய சமூகத்தை உருவாக்குவது தொடர்பான விவாதங்கள் இருக்கும் வரை, சமூகக் கடப்பாடு தொடர்பான விவாதங்கள் தொடரும் வரை, விளிம்பு நிலை மக்களின் இலக்கிய கலை வெளிப்பாடுகள் தொடர்பான விவாதங்கள் தொடரும் வரை, கட்சி இலக்கியம் இயக்க இலக்கியம் நிறுவன இலக்கியம் தொடர்பான விவாதங்களும் இருந்துதான் வரும்.
கனகரத்னா தனது பல்வேறு கட்டுரைகளிலும், நு¡ல் விமர்சனங்களிலும் ரெஜி சிறிவர்த்தனாவின் மொழியாக்கக் கட்டுரையிலும், வலியிறுத்தும் விஷயம் ஒன்றுண்டு. வெறுமனே உள்ளடக்கத்தையும் படைப்புப் பொருளையும் மட்டுமே வலியுறுத்தம் போக்கை இருவருமே நிராகரிக்கிறார்கள். சமவேளையில் நேர்த்தியும் பயிற்சியும் மட்டுமே அனைத்தம் என்று, சமூகம் மறுத்த உள்ளீடற்ற எழுத்து வகையையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள். வேண்டியது உள்ளடக்கத்திற்கும் உருவத்துக்குமான இயங்கியல் செயல்போக்கேயாகும். ஜன்னலைத் திறந்து வைப்பதும் குளிர் நீரில் கால் நனைப்பதுமே இன்று தேவை. அடிக்கட்டுமானம் மேல்கட்டுமானம் போன்ற விவாதங்களும் இத்தகையைவதான். சதா எதிர்வினை புரிந்த கொண்டிருக்கும் இவற்றை உறைநிலையில் வைத்து விளக்கமுடியாது. கருத்தியலின் வலிமையையும் சில வரலாற்றுக் காலகட்டங்களில் அது பெறும் அழுத்தத்தையும், லு¡யிஸ் அல்த்து¡ஸர் போன்றவர்கள் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். மார்க்ஸ் இதனால்தான் கலையின் வளர்ச்சியை நேரடியாக பொருளியல் வளர்ச்சியொடு பெளதீகக் காரணிகளோடு சமன்படுத்திப் பார்க்கவில்லை.
தொன்மங்களையும் புராணிகங்களையும் பாவிப்பது இன்று அதிகரித்து வருகிறது. ஜெயமோகனுடைய தொன்ம சித்தரிப்புக்களையும் மொழியாடல்களையும் நாம் அகண்ட இந்தியக் கதையாடலாகக் கொள்வோமாயின், கோணங்கியின் சொல்லாடல்களை தமிழின தொன்மங்களின் சொல்லாடல்கள் அடங்கிய கதையாடலாகப் புரிந்த கொள்ளலாம். இந்தக் கதையாடல்கள் இயல்பாகவே இன்றைய உலகில் உருவாகி வரும் கருத்தியல்களை பிரதிநிதித்தவப்புடுத்துவதாக ஆகிறது. மதவழித் தேசியம், இனவழித் தேசியம் என இவைகளை வரையறுக்கலாம். தொன்மங்களைப் பாவிப் பது வரலாற்றின் தொடர்ச்சியாக மனிதனை வைத்துக் காணப் பயன்படவே செய்கிறது. செம்பேன் உஸ்மானும், ரித்விக் கட்டும் மார்க்குவசும் தொன்மங்களைப் பாவிப்பதற்கும், மதவழி சனாதனி தொன்மங்களைப் பாவிப்பதற்கும் நிறைய மாறுபாடுகள் இருக்கிறன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. தேசியத்துள் மோதலும் வேறுபாடு கொண்ட இலக்கிய வெளிப்பாடுபகளின் தோற்றமே வளர்ச்சிக்கும் ஜனநாயகப் பரவலுக்கும் பரந்துபட்ட மானுடப் பங்குபற்றலுக்கும் இட்டுச் செல்லும்.
இதழியலுக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்த ஒர் கட்டுரை மிக முக்கியமானதாகப் புடுகிறது. இச்சந்தர்ப்பத்தில் கொலம்பிய நாவலாசிரியர் கார்ஸியா மார்க்வெஸ் ஒரு பத்திரிக்க¨யாளர் என்பதையும் ஹிட்டன் அஜன்டா, தி ஹீரோஸ் போன்ற நு¡ல்களை எழுதிய ஜான் பில்ஜர ன் எழுத்துக்கள இலக்கியத்தரம் வாய்ந்தவை, காலத்தை மீறி நிற்பவை என்பதையும் குறிபப§ட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. தான் முதலில் இதழியலாளர் பிற்பாடுதான் நாவலாசிரியர் எனும் மார்க்ஸின் மாயா யாதார்த்தம், இரத்தமும் சதையுமான வரலாற்றைக் கலங்கடித்துவிடுகிறது என மெய்யாகவே அக்கறைப்படும் கனகரத்னா, காட்பாதர் படத்தில் வன்முறையை வழிபடுவது தொடர்பான அறவியல் கேள்வியையும் எடுத்துக் கொள்கிறார். மார்ட்டின் ஸ்கோர்ஸிஸின் பேட் கைஸ் படத்தில் கனகரத்னா கவலைப்படும் அறவியல் சமநிலை கலைநேர்த்தியுடன் கையாளப்படுவது இங்கு ஞாபகம் வருகிறது. சினிமாவின் தனித்துவம், கால- இட - வெளியின் கலையாக அது உணரப்படுதல், படத்தொகுப்பில் படம் உருவாவது போன்றன பற்றிய நுட்பமான அவதானங்களை, புடோவ்கின், ஐஸன்ஸ்டீன் போன்றவர்களை முன்வைத்து கனகரத்னா சொல்லிச் செல்கிறார். உன்னதக் கலைக்கும் வெகுஜனக் கலைக்குமான இடைவெளியைக் கடந்து செல்லும் ஊடகமாக சினிமாரவைப் பார்க்கும் ரேமான்ட் வில்லியம்ஸின் பிறிதொரு கட்டுரையும் முக்கியமான கட்டுரையாகும்.
கனகரத்னாவின் முக்கியத்துவம் என்பது இன்றைய சூழலில் அவரது பல்துறைசார் இணைவுப் பார்வையாகும். அமெரிக்க வகையிலான கல்விப் பரவலாக்கத்தை அடுத்தும், போர்டு கம்¦னியில் கன்வேயர் பெல்ட் உற்பத்தி முறைமையை அடுத்தும் துறைகளில் சிறப்புத் தேர்ச்சி வலியுறுத்தப்பட்டு, பல்வேறு அறிவுத்தறைகளுக்கிடையிலான இணைப்புக் கண்ணிகள் முற்றிலும் அறுக்கப்பட்டுவிட்ட.து. சுரண்டலின் நுட்பங்களையும், ஒடுக்கமுறையின் நுண் அரசியலையும் அறிவதனின்றும் இந்த அறிதல் முறை இன்றைய மனிதனைத் தடுத்தவிட்டது. இதனால் தான், தன்னைச் சுற்றிய சகமனிதனிலிருந்தும், சூழலிருந்தும் மனிதன் முழுக்கவும் அன்னியமாகிக் கொண்டு வருகிறான். அதிகமானவர்கள் பொருளியல் சுபிட்சத்தில் வாழுவதாகச் சொல்லப்படும் அமெரிக்காவில், சுயஅன்னியமாதல் மற்றும் சமூக அன்னியமாதல் அதிகரித்து வருவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இச்சுசூழலில், வாழும் உலகு பற்றியதும் பல்துறை அறிவுத்துறைகள் பற்றியதுமான இணைப்புக் கண்ணிகளைக் கண்டடைவதன்மூலமே, ஒரு மனிதன் தனது தேர்வுமிக்க செயலை மேறகொள்ளமுடியும். அவ்வகையில் இன்று எந்தத் துறை வளர்ச்சியாயினும், பல்துறையின் வளர்ச்சிகளையும் உறவுகளையும் அறிந்து கொள்வதைக் கோரி நிற்கிறது. அவ்வகையில் கனகரத்னாவின் எழுத்துக்களின் விமர்சன அணுகுமுறை, இவ்வாறான பல்துறைசார் விமர்சன அணுகுமுறையாக இருப்பது சந்தோஷமானதாகும்.. இவரது எழுத்து இன்றைய தமிழ்ச சூழலில் பெறும் முக்கியத்துவம் இதன் பாற்பட்டதே என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நன்றி: 'பதிவுகள்' பெப்ருவரி 2003 இதழ் 38
•<• •Prev• | •Next• •>• |
---|